ஐ.பி.எல். போட்டி சென்னையில் கூடாது: 5 கட்சிகள் வலியுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2018 (புதன்கிழமை)
காவிரி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சென்னையில் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று துவங்குகின்றன. ஏப்ரல் 10ஆம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சென்னையில் நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தப் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் சில கோரிக்கை விடுத்துள்ளன.
திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, எஸ்டிபிஐ ஆகியவை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.