போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் முதலே சென். மேரிஸ் போட்டியில் ஆதிக்கஞ்செலுத்த ஆரம்பித்தனர். போட்டியின் 14ஆவது நிமிடத்தின் ஓல்ட் மெசனோடியன்ஸ் அணியின் அமல் மென்டிசின் முறையற்ற ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை மூலம் எச்சரிக்கப்பட்டார்.
போட்டியின் 19ஆவது நிமிடத்தில் மதிவதனன் தனித்து காவிச்சென்ற பந்தினை தடுப்பதற்கு மெசனோடியன்ஸ் அணியின் நிஷான் மதுசங்க முன்னேறி வருகையில், மதிவதனன் பந்தினை தலைக்கு மேலால் உதைந்து கோலாக்கினார்.
எனவே, முதல் 20 நிமிடங்களுக்குள் யாழ் தரப்பினர் தமது சொந்த மைதான ஆட்டத்தில் முன்னிலை பெற்றனர்.
தொடர்ந்தும் ஆட்டத்தினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென் மேரிஸ் அணியினருக்கு 36ஆவது நிமிடத்தில் அணித் தலைவரும், 23 வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரருமான நிதர்சன் லாவகமான முறையில் அணிக்கான இரண்டாவது கோலினையும் பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து இரு அணியினரும் முதல் பாதியில் எஞ்சியிருந்த நேரங்களில் கோலுக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் நிறைவுற, இரண்டு கோல்களால் சென் மேரிஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.
இரண்டாம் பாதியில் ஆரம்பம் முதலே வேகமாக ஆடுவதற்கு ஆரம்பித்தனர் ஓல்ட் மெசனோடியன்ஸ்.
சற்று நேரத்தில் நிதர்சனால் அனுப்பப்பட்ட பந்தினை மதிவதனன் கோலாக்கத் தவறினார்.
மறுமுனையில் ஓல்ட் மெசனோடியன்ஸின் தரங்க பண்டார, தர்மபிரிய க்கிரேரோ ஆகியோர் தமது முதல் கோலினை பதிவு செய்வதற்காகப் போராடிக்கொண்டிருந்தனர். நீண்டகால உபாதையின் பின்னர் அணிக்கு திரும்பியிருக்கும் அருள்ராசா யூட் மற்றும் மதிவதனன் ஆகியோரது தொடர்ச்சியான முயற்சிகள் துஷ்மந்த க்குரேற, சவிந்த பெர்ணான்டோ ஆகியோரால் தடுக்கப்பட்டன.
தரங்க பண்டார தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பினை நேரடியாக கோல் காப்பாளரின் கைகளுக்குள் உதைந்து வீணாக்கினார்.அருள்ராசா யூட் மறுமுனையில் காத்திருக்க பந்தினை கோல் காப்பாளரை நோக்கி உதைந்து வாய்ப்பினை வீணாக்கினார் மதிவதனன்.
தொடர்ந்தும் இறுதி முயற்சியாக, மதிவதனன் உள்ளனுப்பிய பந்தினை கோல்காப்பாளர் தடுக்க, கோலேதுமின்றி நிறைவுற்றது இரண்டாம் பாதி.