விசேட நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை; தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2016 (வியாழக்கிழமை)
வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விரக்திக்கான காரணங்களை தெளிவுப்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
31 கைதிகளின் கையொப்பத்தோடு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினூடாக அனுப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன், அரச கருமமொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், சட்ட உதவி ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சாதாரண நீதிமன்றங்களைப்போன்றே விசேட நீதிமன்றமும் வழக்கு விசாரணைகளை இழுத்தடிப்பதோடு, மீண்டும், மீண்டும் தவணைகள் வழங்கப்படுகின்றனவே தவிர வழக்கு முடிவுக்கு வருவதாக இல்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் , அரச தரப்பு சாட்சியங்கள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பதோடு, அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி பல காரணங்களால் சிறப்பு நீதிமன்றம் மீது தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரக்தியேற்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அந்த கடிதத்தில் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், அரசியல் கைதிகளை விடுதலை செயவதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், விசேட நீதிமன்றங்கள் ஆமைவேகத்தில் செயற்படாது துரிதமாக இயங்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு இல்லையேல், விரக்தியுற்றிருப்பவர்கள் நீதிமன்ற நடவிக்கையைப் பகிஷ்கரிக்ககூடும் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செயவதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.