சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை அவரது மகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தந்தையை வெட்டிய மகன் ராஜேஷை போலீசார் கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி உயர்நீதிமன்றத்துக்குள் அரிவாளை எடுத்து சென்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வட்டத்தின் கீழ் உள்ள மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்புக்கு கீழ் உள்ள, வழக்கறிஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் ஜி.டீ. கோர்ட் வழக்கறிஞர் என கூறப்படுகிறது.
அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அதில் இரண்டாவது மனைவியின் மகன் ராஜேஷ் என்பவர் தன்னுடைய சகோதிரியின் திருமணத்தை பற்றி பேசுவதற்காக வந்த போது இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், தன்னுடைய சட்டையில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். அதன் பின்னர் அவர் தப்ப முயன்ற போது அங்குள்ள சக வழக்கறிஞர்கள் ராஜேஷை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். மணிமாறனுக்கு கழுத்திலும், காலிலும் வெட்டப்பட்டு அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.