ரஜினிகாந்த் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம் அமெரிக்காவில் நலமாக இருக்கிறார் லதா ரஜினிகாந்த் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)
என் கணவர் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம். அவர், அமெரிக்காவில் நலமாக இருக்கிறார்" என்று லதா ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் அடுத்த மாதம் (ஜூலை) வெளிவர இருக்கிறது. இதையடுத்து அவர் ஷங்கர் டைரக்ஷனில், 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து அவருடைய உடல்நிலை பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. இலங்கையில் உள்ள ஒரு இணையதளத்தில் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி ஒரு தகவல் பரவியது.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விசாரித்தபோது, அந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இதுதொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியதாவது:-
''என் கணவர் பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் அவர் சென்னை திரும்புவார். அமெரிக்காவில், எங்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் நானும், எங்கள் இளைய மகள் சவுந்தர்யா அஸ்வினும் அமெரிக்கா செல்ல இருக்கிறோம். என் கணவர் பற்றிய எந்த வதந்தியையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம்." இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.