தொழில் அதிபருடன் நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம் பெங்களூருவில் நடந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியாமணி. 2004-ல் பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். கார்த்தி ஜோடியாக பருத்தி வீரன் படத்தில் நடித்தார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது. மலைக்கோட்டை, அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 31 வயது ஆகிறது.
பிரியாமணியும் தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரும் 2 வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். முஸ்தபா ராஜை காதலிப்பதாக பிரியாமணியும் உறுதிபடுத்தினார். விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் அறிவித்தார்.
திருமண நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் பிரியாமணி-முஸ்தபா ராஜ் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூருவில் உள்ள பிரியாமணியின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை. திருமண நிச்சயதார்த்த படத்தை பிரியாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதில் ‘எனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை மகிழ்ச்சியோடு அனைவருக்கும் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகைகள் பலர் டுவிட்டர், பேஸ்புக்கில் பிரியாமணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வருட இறுதியில் பிரியாமணி-முஸ்தபா ராஜ் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று பிரியாமணி அறிவித்துள்ளார்.