மேற்கு வங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2016 (வெள்ளிக்கிழமை)
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக நடந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் கட்சி 294 தொகுதிகளில் 211 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க உள்ள மம்தாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் மேற்கு வங்க ஆளுநர் கே.என்.திரிபாடி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, பாபுல் சுப்ரியோ, வங்கதேச தொழில்துறை அமைச்சர், பூடான் பிரதமர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் கேஜரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
கொல்கத்தாவில் நடக்கும் இவ்விழாவில் திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி.,யும், மகளிரணி தலைவருமான கனிமொழி கலந்து கொள்ள உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. பதவியேற்பு விழாவிற்கு திமுக.,விற்கு மம்தா அழைப்பு அனுப்பியதை அடுத்து, கனிமொழி இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளார்