ஒரு பதவியில் இருப்பவர் மற்றொரு பதவிக்காக போட்டியிடக் கூடாது. நூம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கு தடைவிதிப்போம் என்று கீரமங்கலத்தில் பேசினார் சீமான்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலா துரைப்பாண்டியனை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி கீரமங்கலத்தில் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், பேராவூரணி தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்பது முதல் அனைத்தும் அரசு பணியாக மாற்றப்படும். ஒவ்வொருத்தருக்கும் என்ன வேலை தெரியுமே அதை அரசு வேலையாக மாற்றுவோம்.
எங்கள் ஆட்சியில் கருப்பட்டி, வெல்லம், பால், மீன் வளர்ப்பு, அனைத்தும் அரசே செய்யும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழகம் இன்று சந்தையாக உள்ளதை மாற்றி உற்பத்தி நாடாக்குவோம்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் சென்னை மட்டும் தலைமையிடமாக இருக்காது. சென்னை கணினி மையம், திரைதுறை தலைநகராகும், கோவை தொழில், மதுரை கலை பண்பாடு, திருச்சி நிர்வாக தலைநகரம், கன்னியாகுமரி என்று 5 இடங்களில் தனித் தனி தலைநகரங்கள் செயல்படும்.
எங்கள் ஆட்சியில் யாரும் ஒரு குழி நிலம் விற்றாலும் அரசிடம் தான் விற்கவேண்டும். தனியாருக்கு விற்க முடியாது. அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வருவோம். சாலைகள் எல்லாம் பூமிக்கு அடியில் செல்லும்.
ஒருவருக்கு ஒரு பதவி என்பதை சட்டமாக்குவோம். இன்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அன்புமணி ராமதாசு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது இடைத் தேர்தல் நடத்தக் கூடாது. இவற்றை மாற்ற தான் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறோம்.
அரசாங்கமே மது விற்பதை ஏற்க முடியவில்லை. அதை மாற்றி கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு அனைத்தும் இலவசமாக்கப்படும்’’ என்றார்.