இன்று ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி காக், பண்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பண்ட் 1 ரன்கள் எடுத்த நிலையில் அரவிந்த் பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் மெதுவாக (SLOW PITCH) இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.
இந்த கடினமான ஆடுகளத்தில் தொடக்க வீரர் டி காக் சிறப்பாக விளையாடி 52 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்தார். இறுதியில் கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 17 ரன்கள் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், கெய்ல் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விராட் கோலி, கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் விராட் கோலி மிகவும் கவனமாக விளையாடினார். ஆட்டத்தின் 2-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கெய்ல் கிளீன் போல்டானார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 6 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.
பெங்களூர் அணி 2.4 ஓவரில் 17 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து கோலியுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் கோலி நிதானமாக விளையாட மறுமுனையில் ராகுல் அதிரடியாக விளையாடினார். அவர் 23 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் குவித்து பிராத்வைட் பந்தில் எதிர்பாராத விதமாக போல்டானார்.
அப்போது பெங்களூர் அணி 10.1 ஓவரில் 83 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து வந்த வாட்சன் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒருபுறம் மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அதன்பின் பெங்களூர் அணிக்கு எளிதாகிவிட்டது. கடைசி 3 ஓவரில் 13 ரன்கள்தான் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 12 ரன்கள் சேர்த்தது.
இதனால் இரண்டு ஓவரில் 1 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி அந்த ரன்னை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் பெற்றதால் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியுடன் குவாலிபையர்-1ல் 24-ந்தேதி மோதுகிறது.