இந்தோனீசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது.
மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடுவது போன்ற பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கடந்த மாதம் இந்தோனீசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. குறிப்பாக, ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இந்தோனீசியாவின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
"தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட இயலவில்லை" என்று இந்தோனீசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுகரோஹோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.