நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?
பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2018 (வியாழக்கிழமை)
அந்த வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் (சிபிசிஐடி) கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் கட்சிகள் குறை கூறியுள்ளன.
தமிழக காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவின் (சிபிசிஐடி) கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி நேற்று மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். இந்தக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைதான் தற்போது நிர்மலாதேவி விவகாரத்தை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், சிபிசிஐடியின் கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருப்பது குறித்து தி.மு.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் சந்தேகம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டே நாட்களில் கூடுதல் டிஜிபி மாற்றப்பட்டிருக்கிறார். ஜெயந்த் முரளி நேர்மையான அதிகாரி என்று அறிகிறோம். இப்போது அவரை மாற்றியிருப்பதன் மூலம் எடப்பாடி அரசு யாரையோ காப்பாற்ற முயல்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கூறினார்.
இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அப்பிரிவின் தலைவராக ஜெயந்த் முரளி நீடித்தால், பாலியல் வலையின் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படலாம்; இந்த விவகாரத்தில் ஆளுனர் மாளிகைக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படலாம் என்பதாலேயே சி.பி.சி.ஐ.டி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஜெயந்த் முரளி நீக்கப்பட்டுள்ளார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாலியல் வலை வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலி நாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.
இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலி நாடாவில் பேசியிருந்தார்.
இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.
இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. பிறகு நிர்மலா தேவியும் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு பிறகு, அருப்புக்கோட்டை காவல்துறையிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் இன்று தேவாங்கர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு காவல்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார்.
விசாரணை அதிகாரியான சந்தானம் இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணை வேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தினார். துணைப் பேராசிரியர் நிர்மலா தேவியின் பின்னணி குறித்து அறிவதும் எந்தப் பின்னணியில் அவர் மாணவிகளை அணுகினார் என்பதை தெரிந்துகொள்வதுமே தனது விசாரணையின் நோக்கம் என சந்தானம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவருக்கு உதவியாக வேறு இரண்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தங்களிடம் இருக்கும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.