வட கொரியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடப்பதாக டிரம்ப் தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2018 (சனிக்கிழமை)
வட கொரியா "நடைமுறை செயல்பாடுகளை" எடுக்காதவரை இந்த சந்திப்பு நடைபெறாது என்று முன்னதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது,
டிரம்ப் தன்னுடைய நிர்வாகத்திலுள்ள முக்கிய நபர்களோடு கலந்துரையாடாமல் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர்கள் யாரும் வட கொரிய தலைவர் ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை.
கலவையான செய்திகள்
தென் கொரிய தூதர்களால் வழங்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்த சந்திப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
வட கொரியா அணு ஆயுத குறைப்புக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது, அது நடைமுறை செயல்பாடுகளை எடுப்பது வரை இந்த சந்திப்பு நடைபெற போவதில்லை என்று செய்தியாளர்களிடம் டிரம்பின் செய்தி செயலாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்தபோது குழப்பம் மேலிட்டது.
இந்த அறிவிப்பு வெளியானபோது, அமெரிக்காவின் உயரிய தூதரான வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன் ஆஃப்ரிக்காவுக்கு தன்னுடைய முதலாது அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.
கிம்மை சந்திப்பது டிரம்பின் தனிப்பட்ட முடிவு
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பதற்கு எடுத்த முடிவு அதிபரால் எடுக்கப்பட்ட ஒன்று என்று வெள்ளிக்கிழமை டில்லர்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமை கென்யாவிலுள்ள அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்த டில்லர்சன், வட கொரியா போன்ற முக்கிய பிரச்சனைகளுக்காக உழைப்பதால் 2 நாட்களாக சுகவீனமாகி விட்டதாக கூறிவிட்டார்.
அணு ஆயுத குறைப்புக்கு தயாராக இருப்பதாக வட கொரியா கூறிதாக தென் கொரிய தூதர்கள் தெரிவித்தார்களே ஒழிய, இது அதிபர் டிரம்புடன் மேற்கொள்ளப்படும் சந்திப்புக்கு முன்னர் நடைபெறும் என்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
மாறாக, இந்தப் பேச்சுவார்த்தை தொடருகின்றபோது, அதனுடைய அணு பரிசோதனைகள் நிறுத்திவிடும் என்று வட கொரியா பற்றிய புரிதல் ஏற்பட்டுள்ளது.
தொடரும் தடைகள்
வட கொரியா மீதான அழுத்தத்தை அப்படியே தொடர்வதை துணை அதிபர் மைக் பென்ஸ் வலியறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில் தடைகளை அப்படியே கடைபிடிப்பதை ஒப்புக்கொள்ள செய்ய சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை உரையாடியுள்ளார்.
சீனாவின் முயற்சிகளால் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக சீன அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா சீனாவுக்கு நன்றி கூறியது என்றும், சீனாவின் முக்கியமான பங்கை உயர் முக்கியத்துவம் உடையதாக அமெரிக்கா கருதுவதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி கூறியுள்ளது.
வட கொரிய ஊடகங்களில் இந்த சந்திப்பு பற்றிய எந்த தகவலும் இடம்பெறவில்லை.
ஜநாவிலுள்ள வட கொரிய தூதர் கருத்து
நியூ யார்க்கில் ஐநாவிலுள்ள வட கொரிய தூதரின் அறிக்கையை வாஷிங்டன் போஸ்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.