நீண்ட காலமாக சர்வதேசப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி தற்போது புதிய சர்வதேசப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடிக்கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு நீண்டகாலம் பயிற்சியளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2010-2015 பருவ காலத்தில் தென்னாபிரிக்க அணிக்கு இவர் பயிற்சியளித்த போது டெஸ்ட் தர வரிசையில் தென்னாபிரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே மிக்கி ஆர்தருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க அவர் ஒப்புக்கொண்டார். இந்த மாதத்தின் கடைசியில் பாகிஸ்தான் அணியுடன் ஆர்தர் இணைவார் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீகில் கராச்சி கிங்ஸ் அணிக்கு பயிற்சியளித்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவி மிக்கி ஆர்தருக்கு கிடைத்துள்ளது.
ரி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக அதன் பயிற்சியாளராக இருந்த வக்கார் யூனிஸ் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மிக்கி ஆர்தரை பயிற்சியாளராக நியமித்திருக்கின்றது.
புதிய பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டலில் பாகிஸ்தான் எவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்கப்போகிறதென்பதை அறிந்து கொள்ள இன்னமும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.