நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 பேரை எஸ்.இ./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராதபடி கைது செய்துள்ளது காவல்துறை.
மனம் நலம் குன்றிய நிலையில் காட்டுக்குகைகளில் வசித்து வந்த மது, பசி காரணமாகத் தான் டவுண் பகுதிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த அன்று, காட்டுக் குகையில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட மதுவின் மார்பு எலும்பு இரண்டாக உடைந்ததாகவும், அவரது உடல் உள்ளுறுப்புகளின் பல்வேறு பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின. மேலும், ஒரு சொட்டு நீர் கூட தராமல் மதுவை நடந்தே கூட்டிச் சென்றதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திருச்சூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மதுவின் பிரதேசப்பரிசோதனை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை. சில காட்டுப்பழங்களும், ஒரேயொரு வாழைப்பழத் துண்டும் மட்டுமே அவரது இரைப்பையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பசியோ, வேறெந்த காரணமாகவோ என்றாலும், குற்றம் செய்த ஒருவரைத் தாக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. அந்த உணவின் ஒரு பருக்கை கூட கிடைக்காமல் மதுவை வாட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை.