இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தமிழ் அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு நடவடிக்கையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நல்லிணக்க அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புக்கள் இந்த அலைவரிசையில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவித்தான, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான்.
வெளிநாட்டு தூதுவர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகளும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, பணிப்பாளர் நாயகம் துஷிர மெலெவ்வேதந்திரி, செயற்பாட்டு பணிப்பாளர் அமல் கஜமன்கே உள்ளிட்ட பணிக்குழுவினரும் கலந்துகொண்டனர்.