சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் பரபரப்பு தகவல்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
நீரவ் மோடிக்கு கடன் வழங்கியது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்பதால் இந்த மோசடிக்கு காங்கிரஸே பொறுப்பு என பாஜகவும், நீரவ் மோடியை பாஜக தப்ப வைத்துள்ளதாகவும், அதனால் பாஜக தான் காரணம் என பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் சூழலில், நீரவ் மோடி மோசடிக்கு பயன்படுத்திய வங்கி புரிந்துணர்வுக் கடிதங்கள் 2017-ல் புதுப்பிக்கப்பட்டுள்ளதை சிபிஐ வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியான பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் வியாழக்கிழமை புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்ஸி மற்றும் அவரது 3 நிறுவனங்கள் மீது சிபிஐ, புரிந்துணர்வுக் கடிதங்கள் மூலம் ரூ.4,886.72 கோடி 2017-18ல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் பிற வங்கிகள் பணம் வழங்குவதற்கான 143 வங்கி புரிந்துணவுக் கடிதங்களை பஞ்சாப் தேசிய வங்கி அளித்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.
ரூ.11,400 கோடி மோசடி தொடர்பான வங்கி புரிந்துணர்வுக் கடிதங்களில் பெரும்பான்மையானவை 2017-18 வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. ஜனவரி 31ம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, ரூ.280.7 கோடி மோசடி நடைபெற காரணமாக இருந்த 8 புரிந்துணர்வுக் கடிதங்கள் 2017ல் வழங்கப்பட்டவை.
பஞ்சாப் தேசிய வங்கி அளித்துள்ள கூடுதல் விவரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் புதிதாக போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் மோசடி நடைபெற்ற தொகையாக ரூ.6,498 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த மோசடித் தொகை சுமார் ரூ.11,400 கோடி என பஞ்சாப் தேசிய வங்கித் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
2014 முதல் 2017 வரையிலான காலத்தில் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுடன் மோசடிக்கு உடைந்தையாக இருந்ததாக கருதப்படும் 4 வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது.
2015-17 அக்டோபர் வரை பஞ்சாப் தேசிய வங்கியின் மும்பை நரிமன் பாயிண்ட் கிளை முதன்மை மேலாளராக இருந்த பெச்சு பி திவாரி, துணை பொதுமேலாளர் சஞ்சய் குமார் பிரசாத், கூடுதல் பொதுமேலாளர் மகேந்தர் கே சஹ்ர்மா, ஆடிட்டர் மனோஜ் காரத் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மோசடி தொடர்பாக, மெகுல் சோக்ஸி, அவருடைய கீதாஞ்சலி ரத்தினங்கள், கிலி இந்தியா மற்றும் நக்ஷத்ரா பிராண்ட் நிறுவனங்கள் மற்றும் ஒரு நிர்வாக இயக்குநர், 10 இயக்குநர்கள் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி அதிகாரிகள் 2 பேர் என 16 பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 143 புரிந்துணர்வுக் கடிதங்கள் மட்டுமல்லாது, FLCs எனப்படும் கடன் அளிப்பதற்கான வெளிநாட்டு கடிதங்கள் (Foreign Letters of Credit) 224ஐ பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து சோக்ஸிக்கு வழங்கியது தொடர்பாகவும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
2017-18ல் நடைபெற்ற ரூ.4,886.72 கோடி மோசடி நடைபெற காரணமாக இருந்த போலியான LoU-களை வழங்க உதவியதாக வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத் மீது முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மோசடி வெளித்தெரியாமல் இருப்பதற்காக ‘Core Banking System’ எனப்படும் மைய வங்கி அமைப்பில் மெகுல் சோக்ஸிக்கு LoU-கள் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்களை பதிவு செய்யாமல் புறக்கணித்ததாக இருவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, வைரம், நகைகள் உள்ளிட்டவைகளை வெளிநாடுகளில் வாங்குவதற்காக வழங்கப்படும் புரிந்துணர்வுக் கடிதங்கள் (LoU) 90 நாட்கள் கால அவகாசம் கொண்டவை. ஆனால், பஞ்சாப் தேசிய வங்கி வழங்கியுள்ள LoU-கள் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை கால அவகாசத்துடன் வழங்கப்பட்டுள்ளதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கி மோசடி தொடர்பாக, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸியுடன் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனே (மகாராஷ்டிரா), சூரத் (குஜராத்), ஜெய்பூர் (ராஜஸ்தான்), ஹைதராபாத் (தெலுங்கானா), கோயம்புத்தூர் (தமிழ்நாடு) என 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 நகரங்களின் சுமார் 26 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. அமலாக்கத்துறை 11 மாநிலங்களில் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதில், ரூ.549 கோடி மதிப்பிலான வைரங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.