பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாத அரசு! : இரகசியம் வெளிவருமா?
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2017 (வியாழக்கிழமை)
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பது சாத்தியமற்றது. 1976ஆம் ஆண்டு முதலாக இந்தப் பிரச்சினை தொடருகின்றது. பல நீதிச் சிக்கல்கள் இதில் உள்ளன.
ஒருவருக்கு மரணசான்றிதழ் கொடுத்து விட்டால். அவர் இறந்தவராக கருதப்படுவார் நீதியின் படி ஒன்றும் செய்ய முடியாது.
அப்படி மரண சான்றிதழ் கொடுத்து விட்ட பின்பு அவர் மீண்டும் வந்து விட்டால் அப்படியானவரை ஒன்றுமே செய்ய முடியாது. சட்டத்தின் முன்னால் அவர் இறந்த ஒருவர்.
அரசிற்கு ஒன்றும் மரண சான்றிதழ் வழங்கி வைப்பது அத்தனை கடினமான விடயம் அல்ல. எனினும் இதில் பல பிரச்சினைகள் உள்ளன எனவும் ராஜித தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கூற்றுகள் நடைமுறை அரசியலுக்கு பொருத்தமற்றதாக காணப்படுவததோடு, உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.
அதாவது, இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட பலருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் அப்போதைய இப்போதைய அரசு கூறும் செய்தி விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதாக.
எனினும் இதுவரையில் மரணசான்றிதழ் கொடுக்கப்படவில்லை. குறித்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இல்லை. ஏற்கனவே இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலத்திலும் கூட முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனாலும் இது வரை அரசு தரப்பிடம் இருந்து பதில்களோ அல்லது பெரிதாக பேசப்படுவதோ இல்லை. பாராளுமன்றத்திலும் கூட இந்த விடயம் பேசப்பட்ட போதும் பதில்கள் கொடுக்கப்படவில்லை.
ஒரு வகையில் இலங்கை அரசியல் வாதிகள் மீண்டும் புலிகள், விடுதலைப் புலிகள் என மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டு வருவதற்கும் இந்த விடயம் பிரதான காரணமாக அமைகின்றது.
அதேபோன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இரகசியங்களை விரைவில் வெளிப்படுத்துவேன் என்றார். ஆனால் இது வரை மௌனமே.
இப்போதைய ஜனாதிபதியும் கடந்தகால பல இரகசியங்களை வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்தார் என்றாலும் கூட அவரும் இதுவரையில் பேச வில்லை.
அவர்கள் மறைத்து வரும் இரகசியம் எது? அதேபோல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டதாக கூறப்படுபவர்களுக்கு மரண சான்றிதழ்களை ஏன் கொடுக்க வில்லை? இந்தக் கேள்விகளுக்கு அரசு தரப்பு பதில் கூறவில்லை.
என்ற போதும் அரசு தரப்பு ஒரு வகையில் இறுதி யுத்தம் தொடர்பிலான இரகசியத்தை ஓர் பொக்கிஷமாகவே இது வரை காத்துக் கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
போர்க் குற்றமாக இருக்கட்டும், இலங்கை பயங்கரவாத சட்டமாக இருக்கட்டும், பல பிரச்சினைகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கியஸ்தர்களின் மரண சான்றிதழ்கள் தீர்வு கொடுக்கும்.
என்றாலும் தொடர்ந்து அரசியல் வாதிகளும், அரசு தரப்பும் ஆடி வரும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தின் மூலம் இப்போதைய அரசு விடுதலைப்புகளின் தலைவர் உட்பட பலரின் இறப்புகளை நம்பவில்லை என்றே கூறப்படுகின்றது.
அதே சமயம் முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் கொலை வழக்கை முடிக்க, கொழும்பு நீதிமன்றம் 2009ஆம் ஆண்டுகளில் பிரபாகரனின் மரணச் சான்றிதழை கோரியது.
இந்திய தரப்பிலும் ராஜீவ் காந்தி வழக்கை மரணச்சான்றிதழை கேட்டுக் கொண்டு வந்தது எனினும் அவை கொடுக்கப்பட வில்லை.
மற்றும் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் பிரபாகரன் தொடர்பில் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்தினால்..,
இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என அரசாங்கம் அப்போது தெரிவித்தது.
ஆனாலும் இன்றுவரை நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை. எனினும் விடுதலைப் புலிகள் தொடர்பில் மகிந்த உட்பட பலரது இப்போதைய கருத்து போர் முடிவுற்ற போது கூறியவற்றிக்கு சற்று முரண்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கு விடுதலைப் புலிகளும் இன்றளவும் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதாகவே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்போதைய அரசு விடுதலைப்புலிகள் மீதான யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்து விட்டதையும், புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதையும் ஒத்துக்கொண்டு அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்காமல் ஏன் இழுபறியாக வைத்துள்ளது?
மரண சான்றிதழ்களை வழங்குவது அத்தனை கடினமான விடயம் அல்ல எனும் அரசு தரப்பு ஏன் பிரபாகரனின் மரணத்தை ஒத்துக் கொள்ள வில்லை என்பது தெரியாத விடயம்.
அதேபோல் ஆரம்பத்தில் பிரபாகரனின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டு வந்த அனைவரும் இப்போது மாற்றுக் கருத்துகளை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
ஆக மொத்தம் ஓர் மிகப்பெரிய இரகசியத்தை அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் அரசுகள் பேணிக்கொண்டு வருகின்றது. என்பது ஆரம்பம் முதல் இப்போது வரை அரசியல் வாதிகளின் கூற்றுகளில் இருந்து தெளிவாகின்றதாக கூறப்படுகின்றது.