அ.தி.மு.க அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழுக்கள் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2017 (சனிக்கிழமை)
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் உருவாயின. சசிகலா அணிக்கு தலைமை வகித்த டி.டி.வி. தினகரனை ஒதுக்கிவைப்பதாக சில நாட்களுக்கு முன்பாக அறிவித்த தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்தனர்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சில நிபந்தனைகளை விதித்ததாலும் அமைச்சர்கள் சிலர் பன்னீர்செல்வம் தரப்பு குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்ததாலும் பேச்சுவார்த்தை நடப்பதில் பின்னடைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலையில் அதிமுகவின் தலைமையகத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அந்தக் குழுவில் யார் யாரெல்லாம் இடம்பெற்றிருப்பார்கள் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இந்தக் குழுவில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வீரமணி, தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேசுவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இநத்க் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மஃபா பாண்டியராஜன், பொன்னைய்யன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அ.தி.மு.கவிலிருந்து தான் ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் அறிவித்திருக்கும் நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, அ.தி.மு.க. அம்மா பிரிவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனே நீடிப்பதாக இன்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலையில் டி.டி.வி. தினகரனை, சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி சந்தித்துப் பேசினார்.
கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுவதை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் தடுப்பதாக செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியதோடு, இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதற்காக காவல்துறையிடம் அனுமதியும் கோரியிருக்கிறார்.
அ.தி.மு.கவின் அம்மா அணிக்குள் டி.டி.வி. தினகரன் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து ஒருமித்த கருத்து இல்லாததாலேயே இம்மாதிரியான எதிர்ப்புக் குரல்கள் கேட்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றன.