போட்டி ஆரம்பமான அதே வேகத்திலேயே பந்தைக் எடுத்துச்சென்ற கிரிஷாந்த தனது முதல் முயற்சியை மேற் கொண்டார். இருந்தபோதும் பந்து நேரடியாக கோல்காப்பாளரின் கைகளில் தஞ்சமடைந்தது. அடுத்ததாக பெரேரா மேற்கொண்ட முயற்சியும் சிறந்த முடிவை கொடுக்கவில்லை.
தொடர்ந்தும் முயற்சி செய்த கடற்படை அணிக்கு ரத்நாயக்க உட்செலுத்திய பந்தை இலகுவாகக் கோலாக்குவதற்கான வாய்ப்பு இருந்தபோதும் அப்பந்தை வெளியே உதைந்து ஏமாற்றினார் மென்டிஸ்.
வேகமாக செயற்பட்ட சென். நிக்கலஸ் அணிக்கு அனுபவ வீரர் அமிலன் அடுத்தடுத்து இரண்டு முயற்சிகளை மேற்கொண்ட போதும் கடற்படையின் பின்கள வீரர்களால் அம்முயற்சி தடுக்கப்பட்டது.
மீண்டுமொருமுறை மென்டிஸின் முயற்சி நிக்கலஸ் அணியின் கோல் காப்பாளரால் முறியடிக்கப்பட்டது.
25ஆவது நிமிடத்தில் ரத்நாயக்க உட்செலுத்திய பந்தை தலையால் முட்டி கோலாக்குவதற்கு M. பெரேரா முற்படுகையில் அம்முயற்சியும் மயிரிழையில் நழுவியது.
ரொக்சன் மற்றும் பின்கள வீரரான ஜெயராஜ் ஆகியோரது முயற்சியும் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.
றொட்றிகோ உட்செலுத்திய பந்தை மென்டிஸ் கோல்கம்பத்தை நோக்கி உதைய பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது. அதே வேகத்தில் றொஷான் அடுத்த முயற்சியை மேற்கொள்ள, கோல்காப்பாளர் தடுமாறி விழுந்த வேளையில் வேகமாக செயற்பட்டு கோலைத்தடுத்தார் ஜெயராஜ்.
றொட்றிகோவின் அடுத்தடுத்த முயற்சிகளும் ஜெயராஜ் மற்றும் கோல்காப்பாளரால் தடுக்கப்பட, விறுவிறுப்பாக இடம்பெற்ற முதற்பாதி கோலேதுமின்றி நிறைவிற்கு வந்தது.
முதல் பாதி – சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 00 – 00 இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் வேகமாக செயற்பட்டு தமது வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தனர். அதன் பலனாக கடற்படையின் மதுசன் உட்செலுத்திய பந்தை கோல்காப்பாளர் தடுக்கத்தவறிய போதும், பின்கள வீரர்கள் போராடித் தடுத்தனர்.
68ஆவது நிமிடத்தில் ரொசாரோய் உட்செலுத்திய பந்தை இலகுவாகக் கோலாக்குவதற்கான வாய்ப்பு அமிலனிற்குக் கிடைத்த போதும் அவ்வாய்ப்பு தவறவிடப்பட்டிருந்தது.
பெர்ணான்டோ உட்செலுத்திய பந்து தடுக்கப்பட, அதேவேகத்தில் றொட்றிகோ அடுத்த முயற்சியை மேற்கொண்ட போதும் அதனையும் லாவகமாகத் தடுத்தனர் சென். நிக்கலஸின் பின்கள வீரர்கள்.
77ஆவது நிமிடத்தில் கடற்படைக்கு கிடைத்த கோணர் உதையை (Corner kick) ரத்நாயக்க பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே காத்திருந்த C.பெரேராவை நோக்கி கணிசமான உயரத்தில் நேர்த்தியாக உதைய, அதனை பெரேரா கோல்காப்பாளர் இடது புறத்தே காத்திருக்க நேரடியாக மறுமுனைக்கு உதைந்து கோலாக்கினார்.
அந்த கோலிற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அமிலன் வேகமாக செயற்பட்டு உட்செலுத்திய பந்தை கோலாக்கத் தவறினார் ரொசாய்ரோய்.
இறுதிநேரத்தில் உள்நுளைந்த றொக்சன், பிலிப்ராஜ் ஆகியோர் ஜெயராஜோடு இணைந்து பலத்த போராட்டத்தை வெளிப்படுத்திய போதும் சாதகமான முடிவேதையும் பெற முடியவில்லை.
முழு நேரம் – சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 00 – 01 இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்