பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2017 (புதன்கிழமை)
அவர் தன்னுடைய மக்களுக்கு ஊட்டியிருக்கம் உணர்வு, அந்த மக்களை தொடர்ந்தும் போராடவே செய்யும். அதனை ஒருபோதும் அடக்க முடியாது.
எப்போது...? எந்த கட்டத்தில்..? அவர் பகிரங்கமாக வெளியில் வந்து அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துவர் என்று அவரால் மட்டுமே சொல்ல முடியும். வேறு யாராலும் சொல்ல முடியாது.
தன்னை பொறுத்தவரை தனக்கு கிடைத்த மிக நம்பிக்கையான தகவல்களின் அடிப்பமையில் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதனை தான் அழுத்தமாகவும், ஆழமான நம்பிக்கையுடனும் தெரிவிப்பதாக, நீண்ட நாள் அரசியல் வாதியும், தமிழ்த் தேசியவாதியுமான பழநெடுமாறன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது 84வது அகவையை நிறைவு செய்த பழநெடுமாறன் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1979ஆம் ஆண்டு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர வேண்டும் என இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். எனினும், அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது குறித்து இந்திரா காந்தியுடன் வாதாடிப்பார்த்தேன். எனினும், அவர் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என தமிழ்த் தேசியவாதி பழநெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு இந்திய படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டு, விடுதலைப் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் ஒழிப்பதற்கு முயன்றனர்.
இதனையடுத்து காங்கிரஸ் என்ற பெயரே தமக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில், தமிழர் தேசிய இயக்கம் என்ற பெயரில் தாம் இயங்க தொடங்கினோம்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை சரிவர புரிந்துகொள்ளவில்லை. விதிவிலக்காக இந்திரா காந்தி மட்டும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஓரளவு புரிந்து கொண்டிருந்தார்.
எனினும், அதனை செயற்படுத்துவதற்கு முன்னர் இந்திரா காந்தி சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ஈழத்தமிழர்களின் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை.
சுறுக்கமாக சொல்வதானால் சிங்கள அரசை விருத்தி செய்வதற்காக முயற்சி செய்தார்கள். அதற்கு ஈழத்தமிழர்களை பலிகடாவாக பயன்படுத்தவும் தயங்கவில்லை.
அதன் விளைவு "யானை தன் தலையில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்வதை போல" அமைந்து விட்டது. இது ஈழ தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையாக அமையவில்லை.
மாறாக இந்தியாவுக்கு பிரச்சினையாக அமைந்தது. இந்தியாவின் தவறான கொள்கை சீனாவை இலங்கையில் ஆழமாக கால் பதிக்க செய்தது.
இன்று இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளுக்கு சீனா பேராபத்தாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த வரையிலும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை.
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு இலங்கை தாரைவார்க்க முற்பட்ட போது விடுதலைப் புலிகள் அது தங்கள் மண் என்பதற்காக மட்டும் எதிர்த்து போராடவில்லை.
இந்தியாவுக்கும் ஆபத்து என்று கருதியே தொடர்ந்தும் போராடினார்கள். அதன் காரணமாக எந்த அந்நிய சக்திகளும் வரமுடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், பழநெடுமாறன் அவர் உயிருடன் இருப்பதாக தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.