தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2017 (வெள்ளிக்கிழமை)
அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில்,
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது.
ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த தொடர்புகளை விமானம் இழந்ததால் அதன் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், ஜி எம் டி நேரப்படி 11.06 மணிக்கு லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கி உள்ளதாகவும், அதில் பயணித்த பயணிகள், விமான பணியாளர்கள் உள்பட 249 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அலைவரிசையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக விமானம் தொடர்பை இழந்ததாகவும், விமான படையின் ஜெட் விமானம் ஏர் இந்தியா விமானத்துடன் பாதுகாப்பிற்காக சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்குமுன், முதன்முறையாக உலகைச்சுற்றிய பயணிகள் விமானம் முழுவதும் பெண் குழுவினரால் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.