ராமநாதபரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிரிட்ஜோ, ஜெரோன், கிளின்டன், ஆண்டனி, சந்தியா உள்ளிட்ட 6 பேர் டிட்டோ என்பவரது படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது, மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டல் விடுத்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மீனவர்கள் படகில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்களால் சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற 21 வயதுடைய மீனவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் ஜெரோன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். 4 மீனவர்களும் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். உரிய நேரத்தில் இந்திய கடற்படை வந்திருந்தால் தங்களை உயிர் பலியை தடுத்திருக்கலாம் என்று தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர். எல்லையோரத்தில் இந்திய கடற்படை மீன்பிடிக்கும்போது பாதுகாப்பு அளித்திருக்கலாம் என்றும் கூறினர்.