யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த புலனாய்வு பிரிவு! வீதிகளில் குவிக்கப்பட்ட அதிரடிப்படை?
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
தொடரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவி இந்நேரத்தில் அவசியம் என்றும் உணரப்படுகிறதாக காவல்த்துறையினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதுவரை நாட்களும் கைது செய்யப்பட்ட குழுக்களிடம் இருந்து பெருந்தொகையான வாள்களும், கோடாரிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதற்கிடையில் புலானாய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்கள் யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் வயது 18 தொடக்கம் 20 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் 17 குழுக்களாக செயற்படுகின்றார்கள். பெருமளவிலான கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் இவர்கள், பிரபல பாடசாலை மாணவர்களாகும், சிலர் பாடசாலை படிப்பை பூர்த்தி செய்தவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்தக் குழுவினர் தமக்குத் தேவையான அனைத்தினையும் இரவு வேளைகளில் செய்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புலனாய்வுப் பிரவினர் வெளியிட்ட அதிர்ச்சிகரமான அறிக்கை தான் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
இதேவேளை, யுத்தகாலத்தில் எவ்வாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பீல்ட் பைக்குகளில் நடமாடித்திரிந்தனரோ அதே நிலை மீண்டும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஒருபுறம் கோப்பாபுலவில் தங்கள் சொந்த மண்ணை தருமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறத்தில் கைதுசெய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது உறவுகளை விடுவிக்குமாறு வீடுகளில் இருக்கும் உறவுகள் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தங்கள் எதிர்காலத்தை உணராத இன்றைய இளைய தலைமுறையினர் இப்படி திசைமாறி, வன்முறையின் பக்கம் செல்வது வேதனையளிக்கிறது என பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்கள்.