ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்
பின்னர், அது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு விடப்பட்டது. விவாதத்திற்கு பிறகு, இந்த சட்டம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்களின் வெற்றி
வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை எந்த காலத்திலும் அழியாத வண்ணம் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஏற்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் கூறியுள்ளார்.
மாணவர்கள் ஜெயித்துவிட்டார்கள் இந்த வெற்றி மாணவர்கள், இளைஞர்களே சாரும் என்று கார்த்திகேய சேனாபதி மற்றும் ஹிப் ஹாப் தமிழன் ஆதி ஆகியோர் தங்களது நன்றிகளை சமர்பித்தனர்.
முன்னதாக, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது கிடைக்காததால் ஏமாற்றமடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், ஜனவரி 15 ஆம் நாள் தொடங்கி அலங்காநல்லூரில் நடத்திய போராட்டத்திற்கு அடுத்த நாள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.
தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரிடத்திலும் ஆதரவு பெற்று சுமார் ஒரு வாரம் நடைபெற்ற பேராட்டத்திற்கு பிறகு, மத்திய மாநில அரசுகள் இணைந்து, மாநில அரசின் ஒரு அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தன.
ஆனால், தற்காலிக தீர்வு வேண்டாம், ஐல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர தீர்வு வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டத்தத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், தங்களுடைய கோரிக்கை ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் தற்போது கலைந்து செல்லலாம் என்றும், சட்டத்தை கூடிய சீக்கிரம் இயற்றாவிட்டால் பின்னர் போராடலாம் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு முன்னோடிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.