கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய சென்னை மெரினாவில் போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2017 (வியாழக்கிழமை)
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் மதுரை அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் நேற்று முன்தினம் காலை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையில் சமூக வலைதளம் மூலம் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியானதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெரீனாவில் குவிந்தனர். ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்வதுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை மற்றும் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு களைய மறுத்துவிட்டனர். இதனால் மெரீனாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் மூலம் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இளைஞர்களின் போராட்டத்திற்கு திரைப்பட இயக்குநர் சேரன், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்த தமிழக அரசு, இளைஞர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் கொண்ட குழுவிடம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே. பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.