புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2016 (வியாழக்கிழமை)
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆளுநரின் உத்தரவுப்படி நில நிர்வாக துறையில் கூடுதல் முதன்மைச் செயலாக இருந்து வந்த கிரிஜா வைத்தியநான் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராமமோகன ராவ் வகித்து வந்த ஊழல் கண்காணிப்பாளர் ஆணையர் பொறுப்பையும், நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். ஆளுநரின் உத்தரவுபடி பொதுத்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை வெளியிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநான், 1981ம் ஆண்டின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர். சென்னை ஐ.ஐ.டி.யில் சுகாதார பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். மாநில சுகாதார சங்க திட்ட இயக்குநராக கிரிஜா இருந்தபோது, தமிழகம் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திற்கான விருதை பெற்றது. சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் அனுபவம் கொண்டவர். சுகாதாராம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீட்டில் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். ராம மோகன ராவின் காரில் இருந்து சைரன் விளக்கும் அகற்றப்பட்டது.