ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை மோடி சந்தித்ததை விமர்சித்து அவர் கூறிய கருத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து சொந்த கட்சியை சேர்ந்த மகளிர் தலைவர் விஜயதரணியை தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கரகாட்டக்காரி என விமர்சித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இளங்கோவன், செய்தியாளர்க்ளுக்கு அளித்த பேட்டி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி சீமானின் பற்றி பேசிய இளங்கோவன், சில பெயர்கள் அழகாகத்தான் இருக்கும். பரதேசியெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
அவரின் இந்த கருத்து தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் சீமான் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் உத்தமராகவே இருக்கட்டும், நான் பரதேசியாகவே இருக்கிறேன் என்று பதிலடியாக பேசினார்.