சாவகச்சேரியில் கோர விபத்து - 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2016 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
குறித்த விபத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக சங்கத்தான பகுதியில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலாவுக்காக 14 சிங்களவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானே விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ஹயஸ் வானின் டயரில் காற்று போயுள்ளதால், வீதியை விட்டு விலகி அரச பேருந்துடன் மோதியுள்ளது.
இதில் 7 ஆண்களும் மற்றும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வானில் பயணித்த ஏனைய நால்வரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கவலைக்கிடம்...
குறித்த விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் ஆண்களும் நான்கு பேர் பெண்களும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் ஒன்று சிதைவடைந்திருந்தமையால் இப்பொழுது தான் அது ஆண் அல்ல பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களின் நிலையும் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட பதினாறு பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.