வடக்கு மக்கள் மீண்டும் ஆயுதமேந்தாத வகையில் நியாயம் வழங்க வேண்டும்! - ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)
வடக்கிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய ஹபரகட ஆர்ய நிகேதன பிக்குமாருக்கான பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் விடுதியை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக்கூடிய அரசியலமைப்புடன், சமூக நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பல நாடுகளில் இலட்சக்கணக்கான இலங்கை பிரஜைகள் அகதிகளாக இருப்பதுடன், வடக்கிலுள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மக்கள் மீண்டும் ஆயுதம் தூக்காதவாறு அனைவருக்குமான சமூக நியாயத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நீண்ட காலமாக இடம்பெற்ற அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் 25 மாவட்டங்களுக்கும் நியாயமான அபிவிருத்தி பயன்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமயப் பணியில் ஈடுபட்டுள்ள விகாரைகளை பலப்படுத்தும் அரசாங்க கொள்கைக்கமைய தற்போதய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.