மட்டக்களப்புக்கான யாத்திரையை புனானையுடன் கைவிட்டு, பொது பலசேனா அமைப்பினர் இன்று அதிகாலையில் திரும்பிச் சென்றுள்ளனர். பொதுபல சேனா அமைப்பினர் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மட்டு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
கொழும்பில் இருந்து பேரூந்துகளில் மட்டக்களப்பிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த போது பொலிஸாரினால் ரிதிதென்ன பகுதியில் பொதுபல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதேவேளை பொதுபல சேனா அமைப்பினர் பயணம் செய்த வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து புனானை வரை கால்நடையாக வருகைதந்தனர்.
புனானை பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் நேற்று இரவு தங்கியிருந்த பொது பலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் இன்று மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்வோம் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் இரவோடு இரவாக விகாரையை விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி வெளியேறினர். வாகனங்களில் செல்லும்போது 'நாங்கள் மீண்டும் வருவோம்' என கூச்சலிட்டு சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியதையடுத்து, ஞானசார தேரருடன் அவர் பேச்சு நடத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதேவேளை பொதுபல சேனாவினரைத் தடுக்க நேற்றும் இன்னும் மட்டக்களப்பில் எல்லைப் பகுதியில் பொலிசாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.