லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாலும் தெற்கு அந்தமான் மற்றும் சுமத்ரா தீவு இடையே காற்று மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதாலும் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கில் நகர்ந்து, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சுமத்ரா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி இருப்பதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் பனியுடன் கூடிய குளிர் மக்களை வாட்டியது. அதைதொடர்ந்து காலையில் லேசான வெயில் எட்டி பார்த்த நிலையில், மீண்டும் மழை பெய்தது. இதனால் காலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.