புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 20 ரூபாய் நோட்டுகளில் 'L' என்ற எழுத்து உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் என்றும், தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கையெழுத்து இடம் பெறும் என்றும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
புதிய 50 ரூபாய் நோட்டுகளில் எவ்வித உள்ளீடு எழுத்துக்களும் இடம்பெறாது என்றும் ஆளுநரின் கையெழுத்து மட்டுமே இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பழைய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.