சிங்கள மொழியில் கடிதம் வந்தால், அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்புவேன்”-சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)
எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவைத்தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றும் போது,
‘வடமாகாணத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இங்குள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மொழி பெயர்ப்பு செய்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. இங்கு சிங்கள உறுப்பினர்களும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் மொழியில் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளையும், இங்கு சிங்கள மொழியில் வரும் கடிதங்களை தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்க வேண்டிய தேவை உள்ளது. இது தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியைக் கோரியுள்ளேன்’ என்று கூறினார்.
இதன்போது எழுந்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ‘வடமாகாணத்திலும் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். இப்பிரச்சினையை பல காலமாக இவ்வாறு தெரிவித்தபடி உள்ளீர்களே தவிர, இதற்கு உரிய நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்குரிய கொடுப்பனவு தொடர்பில் தெரியப்படுத்தினால், வடமாகாணத்தில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றுவார்கள். எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்’ என்று தெரிவித்தார்.