யுத்தத்தில் இறந்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூருவதில் தவறில்லை-ராஜித சேனாரத்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2016 (வியாழக்கிழமை)
யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை நினைவுகூர்ந்தால் அதுகுறித்து இராணுவம் பார்த்துக்கொள்ளும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, மாவீரர் தினம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”மாவீரர் தினம் தொடர்பான கருத்துக்களை சிலரே வெளியிட்டு வருகின்றனர். கடந்த வருடம் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மாவீரர் தினம் அனுஷ்டித்தபோது 13 பேர்தான் இருந்தார்கள். இம்முறை எத்தனை பேர் வருகின்றார்கள் என பார்ப்போம்.
கடந்த முறை இடம்பெற்ற தேர்தலில் அவர் எத்தனை வாக்குகளை பெற்றார்? அதேபோல் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு என்ன நடந்தது? கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரனை ஏன் மக்கள் வெற்றியடையச் செய்தனர், காரணம் தமிழ் மக்கள் நடுநிலையான நிலைப்பாட்டிலிலேயே உள்ளனர்.
யுத்தத்தில் இறந்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூருவதில் தவறில்லை. ஆனால் புலிகளை நினைவுகூர்ந்தால் அதுகுறித்து இராணுவம் பார்த்துக்கொள்ளும்” என்றார்.