இராணுவம் கட்டித்தரும் வீடு வேண்டாம்! - சுலக்சனின் தந்தை நிராகரிப்பு.
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2016 (திங்கட்கிழமை)
கொக்குவிலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தெரிவித்த நிலையில் இராணுவத்தின் உதவியுடன் கட்டப்படும் வீடு தமக்கு தேவையில்லை என, சுலக்சனின் தந்தை அதனை நிராகரித்துள்ளார்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோரை மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நான் வந்திருப்பது எதற்கென்றால் உடனடியாக சில நிவாரணங்களை வழங்குவதற்காகவே.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பெற்றோருக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்பதற்கு இராணுவத்துடன் கலந்தாலோசித்திருந்தேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். என்னுடைய அமைச்சின் ஊடாக அதற்குரிய பணத்தினை பெற்றுக்கொடுப்பேன். கஜனுடைய குடும்பத்தினருக்கு நிலம் இருப்பதால் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டிகொடுக்கப்படும். சுலக்சனுடைய குடும்பத்தினருக்கு நிலம் இல்லாத காரணத்தினால் பிரதேச செயலரிடம் கலந்தாலோசித்துவிட்டு அவர்களுக்கும் வீட்டினைக் கட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.
அத்தோடு இரண்டு வாரத்துக்குள் இரு குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு கொடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந் நிலையில் மாணவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று என்னிடம் கேட்டுக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் சகோதரர்களுக்கு அவர்களின் கல்வித் தகைமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். நான் கடந்த முறை மாணவத் தலைவர்களை சந்தித்தபோது உடனடியாக இழப்பீடு வழங்குவதாகக் கூறியிருந்தேன். இதற்காகவே இன்றைய தினம் யாழ் வந்தபோது பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துள்ளேன் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுலக்சனின் தந்தையார் தெரிவிக்கையில், நாங்கள் வீடு ஒன்றிற்காக அமைச்சரை சந்திக்க வரவில்லை படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். எனது ஒரு மகன் காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது எனது மற்றைய மகன் சுலக்சனும் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்டிருகின்றார்.
இந்நிலையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் வீடு எனக்கு தேவையில்லை. எனது ஐந்து பிளளைகளையும் நான் ஒருவனாக நின்றே வளர்த்துள்ளேன். சுலக்சன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் அடுத்து எனது மகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என தெரிவித்தார்.