அப்போலோ மருத்துவமனையில் 59 நாட்களுக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2016 (சனிக்கிழமை)
அப்போலோ மருத்துவமனையில் 59 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது நோய் தொற்று ஏற்பட்டு ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்து நோய் தொற்று சிகிச்சை நிபுணர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினர் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி டாக்டர்கள் சிகிச்சையின் மூலம் ஜெயலலிதா உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவருக்கு தொண்டை பகுதியில் சிறிய ஆபரேஷன் செய்து எளிதில் மூச்சு விடுவதற்கு `டிரைக்கியாஷ்டமி’’ என்ற கருவி பொருத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் 2 பேர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் 59 நாள் தீவிர சிகிச்சை பிரிவில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த தனி வார்டு அப்போலோ மருத்துவமனையின் 2வது மாடியில் தற்போதுள்ள தீவிர சிகிச்சை பிரிவின் அருகிலேயே உள்ளது. அவர் கடந்த சில நாட்களாக பல மணி நேரம் இயற்கையாகவே சுவாசித்து வருவதால் டாக்டர்கள் அறிவுரையின் பேரிலேயே தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டுள்ளார்.
தனி வார்டில் சில நாட்கள் தங்கி இருக்க டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதையடுத்து டிசம்பரில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வார் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் மருத்துவமனையில் உள்ள அதிமுக முக்கிய பிரமுகர்கள் மூலம் தகவல் கிடைத்து அங்கு குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். உடனடியாக அங்கு கூடி இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும், பெண்கள் நடனமாடியும் கொண்டாடினர். இந்த தகவல் கிடைத்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும் ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.