இந்தியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தபட்டதாக தகவல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2016 (சனிக்கிழமை)
இந்தியாவிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் நுழைந்ததால் அதனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே பதான்கோட் தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில், இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அளித்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேரும் கொல்லப்பட்டனர். ‘சர்ஜிகல்’ தாக்குதலுக்குப்பின் காஷ்மீர் எல்லையில் அந்த நாட்டு ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருவதால் சர்வதேச எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை தங்கள் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிம் சலீம் பஜ்வா கூறினார்.
மேலும் இந்த விமானம் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து 60 மீட்டர் தொலைவுக்கு உள்ளே வந்ததாகவும், சுட்டு வீழ்த்தப்பட்ட அதன் பாகங்கள் ரக்சாரி செக்டாருக்கு உட்பட்ட அகாகி பகுதியில் விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.