நடிகர் கமல்ஹாசனுடனான உறவு முடிந்ததாக கவுதமி தெரிவித்துள்ளார். 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவதைப்போல் உள்ளது. இக்கட்டான நேரங்களில் தனக்கு ஆதரவு அளித்த கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள கவுதமி, தனது மகளின் எதிர் காலம் தனக்கு முக்கியம் எனவும், நீண்ட ஆலோசனைக்கு பிறகு கமல்ஹாசனிடம் இருந்து பிரிவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குருசிஷ்யன் படத்தில் ரஜினி ஜோடியாக தமிழில் அறிமுகமானார் கவுதமி. தமிழ், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கவுதமிக்கு சந்திப் என்ற வடஇந்திய தொழிலதிபருடன் 1998ல் திருமணம் நடைபெற்றது. கவுதமி - சந்தீப் தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.
கமல் முதலில் வாணி கணபதி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். வாணியை விவாகரத்து செய்தபிறகு இந்தி நடிகை சரிகா உடன் கமல் சேர்ந்து வாழ்ந்தார். சுருதி, அக்சரா என்ற இருமகள்கள் பிறந்த பிறகு சரிகா-கமல் திருமணம் நடைபெற்றது. சரிகாவை விட்டு பிரிந்த கமலுடன் சேரந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. கமலுடன் தேவர்மகன், அபூர்வசகோதரர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமலும், கவுதமியும் சேர்ந்து நடித்த கடைசி படம் பாபநாசம்.