இதன்படி, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் நகர் பகுதி முழுமையாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று வீதியோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.
இவர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், மற்றைய மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐந்து போலீஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பை அனுஷ்டிக்குமாறு அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைத்திருந்தன.
இந்த கோரிக்கையின்படி, இன்றைய தினம் பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.