தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2016 (வியாழக்கிழமை)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே நடந்த, தீப்பொறி பறந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் அவர் இது போன்ற ஒரு உத்தரவாதமளிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
``அது நடக்கும் போது சொல்கிறேன்``, என்று டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி விவாதத்தை நெறிப்படுத்திய கிறிஸ் வாலஸிடம் கூறினார்.
கடந்த பல நாட்களாகவே ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பு தனக்கு எதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அமெரிக்காவில் ஒரு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பது குறித்து தான் அதிர்ச்சி அடைவதாகக் கூறினார்.
அமெரிக்க ஜனநாயகத்தின் பெருமையையே டொனால்ட் ட்ரம்ப் இழிவுபடுத்துகிறார் என்றார் ஹிலரி.
லாஸ் வேகாஸில் நடந்த இந்த தொலைக்காட்சி விவாதம், இது வரை இந்த தேர்தலில் வெளிப்பட்டுவரும் கசப்பான தொனியிலேயே தொடர்ந்தது.
ஹிலரி கிளிண்டனை , ஒரு ``அசிங்கமான பெண்`` என்று ட்ரம்ப் வர்ணித்தார்.
இந்த தொலைக்காட்சி விவாதம் நடந்த 90 நிமிட நேரத்தின் பெரும்பகுதி இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களால் நிரம்பியிருந்தது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புட்டினின் கைப்பாவை என்று ஹிலரி குற்றம் சாட்டினார்.
தனது தேர்தல் பேரணிகளில் ஹிலரி வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.