மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி 423 பந்துகளில் 1 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 258 ரன்கள் குவித்திருந்தார்.
துபையில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 146, ஆசாத் ஷபிக் 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக் 119 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் தேவேந்திர பிஷு பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். ஆசாத் ஷபிக்-அசார் அலி ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பாபர் ஆஸம் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய அசார் அலி, தேநீர் இடைவேளைக்குப் பிறகு 357 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பாபர் ஆஸம் 87 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து அசார் அலி 414 பந்துகளில் 250 ரன்களை எட்ட, பாகிஸ்தான் 141-ஆவது ஓவரில் 500 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் 141 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது. அசார் அலி 258, பாபர் ஆஸம் 67 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.