2011 ஆண்டு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த கொடிகாமம்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த போது பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது
கடந்த 2011ம் ஆண்டு சுன்னாகம் பொலிசார் திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணையின் போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்திருந்தனர்.
பின்னர் குறித்த வாலிபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிசார் அறிவித்திருந்த நிலையில், சிறிது நாட்களின் பின்னர் சந்தேக நபரின் சடலம் குளம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனையின் போது சந்தேக நபர் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பேரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சார்ஜண்ட் ஒருவர் கடந்த வாரம் பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய இணைப்பு
பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி ஐ.எம்.பண்டார உட்பட நால்வரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி ஐ.எம்.பண்டார உட்பட நால்வருக்கும் எதிராக தொடரப்பட்டுள்ள மற்றுமொரு சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19ம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், அன்றைய தினம் குறித்த நால்வரும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..