புதிய முதல்வர் அல்லது ஆளுநர் ஆட்சி? : அதிமுகவினருக்கு நெருக்கடி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2016 (சனிக்கிழமை)
கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கடந்த நிலையிலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை யாரும் இதுவரை நேரில் சந்திக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வரை பார்க்க சென்று ஆளுநரால் ஜெயலலிதாவை நேரில் பார்க்க முடியவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆளுநர் வித்யாசாகரை ஆளுநர் மாளிகையில் நேற்று மதியம் சந்தித்து பேசினார். அதன்பின், ராமமோகனராவ், அதிமுக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் நேற்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினர்.
அந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக தெரிகிறது. அரசு பணிகள் தேங்கிக் கிடப்பதால், அதற்கான கோப்புகளை நீங்கள் பாருங்கள் என்று தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கூறியதாகவும், முதல்வர் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அவர் குணமாகும் வரை தற்காலிக முதல்வர் ஒருவரை தேர்வு செய்யும் அவசியம் குறித்து ஆளுநர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக, அதிமுக தலைமைக்கு, ஆளுநர் கடிதம் எழுதி இருப்பதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் புதிய முதல்வர் நியமிக்கப்பட வேண்டும். இல்லையேல், ஆளுநர் ஆட்சி கொண்டு வர முடிவெடுத்திருப்பதாக ஆளுநர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
எனவே, தற்காலிக முதல்வரை தேர்வு செய்யும் பணியில் அதிமுக தரப்பு ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.