அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.
தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக வருவதற்கு தற்போதையை அதிபரான பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
தனது சொந்தமான மாநிலமான சிக்காகோவில் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து இரு நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற அதிபர் ஒபாமா, இங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்குச்சாவடியின் நுழைவுவாயிலில் இருந்த ஜனநாயக கட்சி தொண்டர்கள் மற்றும் முன்னணி தலைவர்களின் தேர்தல் பணிக்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஒபாமா, தன்னை பின்தொடர்ந்துவந்த பத்திரிகையாளர்களை கிண்டல் செய்யும் விதமாக வாக்கு இயந்திரத்தின் முன்பக்கம் வைத்துள்ள மறைவு தடுப்புக்குள் நுழைந்ததும், ‘இனிமேல் அவர்களால் இங்கு நடப்பதை பார்க்க முடியாது, முடியுமா என்ன?’ என்று நகைச்சுவை ததும்ப கேள்வி எழுப்பினார்.
கடந்த 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு போட்டியிட்டபோது, இதே சிக்கோகோ மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ஒபாமா, தனது வாக்கை முன்கூட்டியே பதிவு செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.