மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் அடுத்த கட்டமாக முன்னாள் கணக்காய்வாளர் ஒருவரை நிதி மோசடி விசாரணை பிரிவினர் அழைத்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பசிலின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீட்டு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கணக்காய்வாளர் அமைதியாக இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் குணமடையும் வரை அவரின் விசாரணைகளை ஒத்திவைத்த நிதி மோசடி விசாரணை பிரிவினர், மக நெகும திட்டத்தின் தற்போதைய கணக்காய்வாளரை விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகிய மக நெகும திட்டத்தின் கணக்காய்வாளரிடம் சூட்சுமமான முறையில் உண்மைகளை வெளிக்கொண்டுவர பொலிஸார் திட்டமிட்டனர்.
இதன்படி “முன்னைய கணக்காய்வாளரிடம் விசாரித்த போது அவர் பயத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார். அதைப்போல் நீங்கள் பயப்படாமல் கூறுங்கள்” என்று நிதி மோசடி விசாரணை பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பின்னர் கணக்காய்வாளர் தனது பையிலிருந்து ஒரு ஆவணத்தை வெளியே எடுத்து நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். இதை பார்த்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த ஆவணத்தில் மக நெகும கணக்காய்வாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி விலகுவதற்கு காரணம் என்னவென அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்,
இதற்கு பதிலளித்த கணக்காய்வாளர்,
“முன்பிருந்த கணக்காய்வாளர்களுக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு நடப்பதை நான் விரும்பவில்லை. அதனால் தான் நான் இன்றே இந்த பதவியில் இருந்து விலகிப் போகின்றேன், முன்னதாக நடந்த சம்பவங்கள் தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றது, அதனால் மற்றவர்களின் பாவங்களை நான் சுமக்க விரும்பவில்லை, தவறு செய்த அமைச்சர்கள் எப்படியோ தப்பித்து கொள்கின்றார்கள்.
இறுதியில் அமைச்சர்களின் உத்தரவிற்கு அடிப்பனிந்து கடமையாற்றிய நாங்கள் தான் நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் செல்ல வேண்டிவரும் எனவும், அன்று நடந்தது இன்றும் எந்த மாற்றமும் இன்றி நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது என மக நெகும திட்டத்தின் கணக்காய்வாளர் குறிப்பிட்டுள்ளார்”.