சிறையில் அடைக்கப்பட்ட கோத்தபாய! இது எதிர்காலத்திற்கான அறிகுறி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2016 (சனிக்கிழமை)
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்ற சிறைக் கைதிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்கான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிணை வழங்கப்படும் வரையில் நீதிமன்றில் கைதிகளை தடுத்து வைக்கும் கூண்டில் கோத்தபாய தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் புகைப்படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை அரசியலை தங்களின் உள்ளக்கைக்குள் வைத்திருந்த ராஜபக்சவினர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, அடைத்ததுடன், இன்றுவரை எவரும் வெளியில் வர முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.
இன்னும் சிலர் என்ன ஆனார்கள் என்று இதுவரையிலான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதன் காரணமாக உறவுகளை இழந்தவர்கள் இன்றளவுக்கும் போராடிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் தங்கள் ஆட்சியின் போது எதுவுமே நடைபெறாதது போலவும், தாங்களே ராஜா, தாங்களே மந்திரி என்று இருந்தவர்களுக்கு இன்று இந்த நிலை வரும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டா்கள்.
ஆனால், இப்பொழுது ஒவ்வொரு ராஜபக்சாக்களும், தடுத்து வைக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், விசாரணைகளுக்காக நீதிமன்றங்களுக்கும், ஆணைக்குழுக்களுக்கும் அலைவதானது ஊழ் வினை வந்து உறுத்தும் என்னும் சிலப்பதிகாரத்தின் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தினை வெளியிட்டுவருகின்றார்கள்.
இதற்கிடையில், இப்பொழுது சிறையில் அடிக்கடி அடைக்கப்படும் ராஜபக்சவினர் ஒத்திகை மட்டுமே பார்த்துவருகின்றனர். வெகுவிரைவில் அவர்கள் முழுமையாக சிறை வாசத்தை அனுபவிப்பதற்கான நாட்கள் தொலைவில் இல்லை என கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
இதுவொருபுறமிருக்கையில், மகிந்த ராஜபக்ச அரசியல் நடவடிக்கைள் எதையாவது வீரியமாக முன்னெடுக்கும் பொழுதெல்லாம், மைத்திரி உடனடியாக ராஜபக்சாக்களில் ஒருவரையாவது கைது செய்து சிறைப்படுத்துவதன் ஊடாக மகிந்தவிற்கு எச்சரிக்கையினை விடுத்துவருகின்றார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியிருப்பினும். பலரை சிறைக்கு அனுப்பியவர்கள் இன்று சிறைக்கு சென்றுவருவதும் இலங்கை அரசியலில் இதுவும் கடந்து போகும் என்னும் தத்துவத்தை வெளிக்காட்டுக்கின்றது.