இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் அலர்ட்: பாதுகாப்பை 30 நாள் பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)
எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவின் சென்னை உட்பட முக்கிய நகரங்களை தாக்கும் அபாயம் உள்ளதால் 30 நாள் வரை உஷாராக இருக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியாவிற்குள் ஊடுருருவி தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமையகமான உரியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தக்க சமயத்தை எதிர்நோக்கி இருந்த மோடி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கடந்த 29ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காலை 4.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. ஹெலிகாப்டர் மற்றும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாக் ஆக்ரமிப்பு பகுதியில் உள்ள 7 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவத்தின் சிறப்பு பிரிவு அதிரடியாக தாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது. எனவே இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் நாடு முழுக்க பாதுகாப்பை பலப்படுத்த எல்லா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களை கூடுதல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தீபாவளி, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைள் நெருங்குவதால் அடுத்த 30 நாள்கள் வரை உஷாராக இருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.