தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது -மனோ கணேசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2016 (வெள்ளிக்கிழமை)
சுமார் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விழா முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.
42வது தேசிய விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் நான்கு மதம் இருப்பதாகவும், மூன்று மொழிகள் பேசப்படுவதாகவும், மூன்று இனங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், தனது அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளின் படி 21 இன குழுக்கள் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இலங்கையானது பல மதங்களை கடைப்பிடிக்க கூடிய, பல மொழிகளைப் பேசக்கூடிய நாடாகும். அதைவிடுத்து இலங்கை ஒரு இனத்தவருக்கு மட்டுமே சொந்தமானது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விளையாட்டு விழாவானது நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள சகவாழ்வு செய்திகளை யாழ். மாவட்டத்துக்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.