காஷ்மீரில் இந்திய ராணுவம் வியூகத் தாக்குதல்: கட்டுப்பாட்டு எல்லையில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2016 (வியாழக்கிழமை)
காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தங்களது இரண்டு ராணுவ வீர்ர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
புதன் இரவு நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.
அதாவது நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை இவர்கள் ஏற்படுத்தல் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதில் பயங்கரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதலைத் தொடரத் திட்டமில்லை. ஆனால் தேவைப்பட்டால் தீவிரவாத எழுச்சியை முறியடிக்க ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பிலும் பேசி எங்கள் கவலைகளை தெரிவித்தோம். இப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதே எங்கள் நோக்கம். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதிகள் நடமாட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்.
அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள். பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.