வடக்கு முதல்வர் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை! அவரை கைது செய்ய முடியாது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2016 (புதன்கிழமை)
மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், தனிநாட்டை உருவாக்க முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவது சட்ட விரோதமானது என்ற போதிலும், தொடர்ந்தும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி வரும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விவாதத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதிநிதியான பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா, வடக்கு மாகாண முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறினாலும் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை என்பதால், அவரை கைது செய்ய வேண்டியதில்லை என்றார்.